இவன் எத்தனை வருஷமா எங்கள் வீட்ல இருகான்னு என்னால சரியா சொல்ல முடியாது. 'நீ பிறக்கறதுக்கு முன்னால இருந்தே இது இங்கதான் இருக்குது' ன்னு என் அம்மா சொன்னதா ஞாபகம். அது ஏதோ ஒரு மார்கழி மாதத்துல அப்பா கோயம்புத்தூர் போயிட்டு வர்றப்ப இத கையில தூக்கிட்டு வந்தாராம். இவன பாக்கற போதெல்லாம் "உனக்கும் எனக்கும் ஒரே வயதாடா பொடிபயலே?"னு கேட்கத்தோன்றும். இவனுக்கு வளர்ச்சியெல்லாம் இருக்காது ன்னு என்னுடைய சின்ன வயதிலேயே, யாரும் சொல்லி கொடுக்காமலேயே தெரிந்து கொண்டேன்.
இவன் எங்க ஈஸ்வர பெரியப்பா வீட்டில், இல்லையென்றால் வெங்கிடு சித்தப்பா வீட்டுல இருக்கிறதுகளைப்போல இல்லாம வித்தியாசமா இருப்பான். மேலெல்லாம் இரத்த சிவப்பு கலர்ல. எம்மேலயும் இவன் கலரு வருமானு உரசி உரசி பார்ப்பேன், ஒன்னும் நடக்காது. படுத்துட்டு இருக்கிறதவிட இந்த தவளை மாதிரி குத்த வச்சிகிட்டு உட்காருவான் பாரு.அடடா! அவ்வளவு அருமையாதான் இருப்பான்.
"இதுகிட்ட மனுஷன் போவானா?"னு அவரவர் ஒதுங்கிவிட எனக்கு மட்டும் செல்லமாயிட்டான். சொல்ல போனால் இவனை என்னோட சுயநலத்திற்கு நான் பயன்படுத்தி கொண்டதெல்லாம் பாவம் இவனுக்கு தெரியாது.
ஆனாலும் சிலநேரத்துல கொதிச்சுத்தான் போயிடுவான். தெரிஞ்சவங்க யாராச்சும் பக்கத்துல இருந்தேதான் ஆகனும். "இப்படி ஒரு கண்றாவி தேவையா?"னு அம்மா கேட்டத நானும் கண்டுக்கல. கொஞ்சம் ஏமாந்தோம்னா அவ்வளவுதான், என்ன கிடைக்கிதோ அத அப்படியே கபளீகரம் பண்ணிடுவான்.
எங்கப்பா என்னமோ மெக்கானிக்தான் தான்,ஆனா இந்த பாவிபயதான் எனக்கு திருபுளியையும், டெஸ்டரையும் எப்படி 'யூஸ்' பண்ணனும்னு சொல்லிகொடுத்தான். அதுக்கப்புறம் நான் சகலத்தையும் கத்துக்கிட்டு இவனை போட்டு படுத்தி எடுத்துட்டேன். எங்கிட்ட இத்தன அடி வாங்குறானே, ஏதாச்சும் ஒரு வார்த்தை? 'ம்கூம்'.
ஒருநாள் என்னாச்சுங்கறிங்க? ஒரு புது சட்டைய போய் வாங்கி இவங்கிட்ட கொடுத்தா, அடுத்த நிமிஷமே அதோட ஒரு கைய பிச்சு சின்னாபின்னமாக்கி குண்டு விழுந்த இலங்கை மாதிரி ஆக்கி வச்சிருக்கான். அன்னிக்கு வாங்குனான் என்கிட்ட பேயடி, அதுக்கப்புறம் ஒரு மாசம் நா அவன் கிட்டகூட போகலியே. கெடக்கட்டும் அப்பதான் புத்திவரும்னு விட்டுடேன். என்னமோ மனசுதான் கேட்கவே மாட்டேனுச்சி, அப்புறமா போனா போகுதுனு நானே போயி அவன சேத்திகிட்டேன். அப்புறம், அவன் இல்லனா எனக்கு எப்படி பொழுதுபோகும்.
இவனுக்கு இத்தபெரிய வாலு மொலச்சிருக்குனு யாருக்குமே தெரியாது, அந்தமாதிரிதான் வெளியில காட்டிக்குவான்.ஆனா எனக்குதான தெரியும் இவனப்பத்தி முழுசா!!! சனி,ஞாயிறு லீவு விட்டா இந்த புளியமரமே கதிண்ணு கெடந்தாலும், இவன எதுலயும் சேத்துகிறதில்ல. இந்த திங்ககிழமை அவசரஅவசரமா குளிச்சிட்டு வந்து ஈரத்தலையோட நிக்கும்போதுதான் இவன் ஞாபகம் வரும் 'எங்கடா இருக்குற நீ 'ன்னு மனசு அடிச்சுகிட்டே தேடுவேன்.
இப்படித்தான் ஒருநாளு நான் இல்லாத நேரத்துல இந்த வெள்ளியங்கிரி பையன் வந்து தொட்டிருக்கான்.அவ்வளவுதான், கணக்கு வழக்கில்லாமல் அடிய வாங்கி கட்டிக்கிட்டு போயிருக்கான். பின்ன, இவன் எனக்கு மட்டுந்தான் அடங்குவான். நா சொல்றததான் கேட்பான். அதுக்கபுறம் வெள்ளிய எப்ப கூப்டாலும் இன்னும் அவன் 'அந்த சனியன் இருக்கா?'னு கேட்பான். 'சின்ன சின்ன புள்ளைக இருக்கற வீட்டுல இந்த தொல்லையெல்லாம் எதுக்கு?' ன்னு என் அம்மாவோட போர் முரசைக் கூட கேக்காம 'போம்மா, இதுல்லாம இன்னும் எத்தனைபேர் இருக்காங்க'னு சொல்லி இவனுக்காக வாதாடியிருக்கிறேன்.
மெல்ல மெல்ல வருஷங்கதான் ஓடிபோச்சு, நானும் ஸ்கூல் முடிச்சு, காலேஜ் முடிச்சு, வேலைக்கும் வந்தாச்சு. நான் காலேஜ் படிக்கும்போதே அவனுக்கு முடியாமல் போயிருச்சாம். நா இருந்தாலாவது பாத்துப்பேன்,பாவம் அவன். கடைசியா ஊருக்கு போனப்ப அவன பார்தேன், வீடுபூரா தேடினதுக்கப்புறம் நான் ஒரு மூலையில அதே பழையமாதிரி குத்தவச்சு உட்கார்ந்துட்டு இருந்தான். அந்த கலரெல்லாம் போயி கருத்து போய்ட்டான். கிட்டதட்ட படுத்த படுக்கைதான். ரொம்ப பரிதாபமா இருந்துச்சு.அப்படியே மெல்ல அவனோட முகத்த தடவிக்கொடுத்தேன். அப்ப அவன் என் கை மேல சாய்ந்தது என்னவோபோல இருந்துச்சு.
கொஞ்ச கொஞ்சமா என்னோட வேலை அவனை மறக்கடித்தே விட்டது. போனவாரம் அடையாருல ஒரு கடைக்குப்போய் 'Mixie' வாங்கிட்டு அப்படியே 'can u show me a latest model Philips ironbox?'னு கேட்கும் போதுதான் மறுபடியும் அவன் ஞாபகம் வருது. இப்ப எனக்கு இன்னொருத்தன் கிடைச்சுட்டான். ஆனா இவன் அவனப்போல குறும்பு இல்ல. அவன் அவன்தான்.
"டேய் பாஸு,எல்லா பணத்தையும் செலவழிச்சிடாம, உன் பெரியப்பா வீட்டிக்கு 2 பிஸ்கெட் பாக்கேட், வெத்தலை சீவல், ஸுவீட் கடைல கால் கிலோ மிக்சர் வாங்கிக. பஸ் 6 மணிக்கு வந்திடும். நீ கிளம்பு, சாயங்காலம் 5.30 மணி பஸ்ல வந்திடு, சரியா ".
அம்மா சொன்ன எல்லாமும் வாங்கி பேருந்துக்காக காத்திருந்தேன், அதோ என் சொந்த ஊருக்காக செல்லும் பேருந்து வந்துவிட்டது. மொத்தம் 7 பயணிகளில் நானும் ஒருவனாக ஜன்னலோர இருக்கையில் பயணம். பேருந்தில் ஜன்னலோர பயணம் என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான, இனிமையான பயணம். அதுவும் அதிகாலை பயணமும், நிலா இரவு பயணமும் என்றுமே சுகம்தான்.
கிராமபுறத்திர்க்கு பெரும்பாலும் இயக்கப்படும் டவுன் பஸ்களின் ஒன்றில் அன்று எனது பயணம். சுமார் 45 நிமிட பேருந்து பயணத்தில் எனது சொந்த கிராமத்தை அடைந்துவிடமுடியும்.
எல்லோருக்கும் சொந்த ஊர் என்றவுடன் ஏதோ ஒரு ஈர்ப்பும், ஏதோ ஒரு பற்றுதலும் ஏற்படுகிறது. எனக்கும் என் சொந்த ஊரை பார்க்க போகிறேன் என்ற ஆவலாக இருந்தது. சொந்த ஊர் கிராமமாக இருந்துவிட்டதால் இன்னும் அதிகமான ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.
15 நிமிட பயணத்தில் நகரை கடந்து கிராம புறங்களின் வழியே பயணம் தொடர்ந்தது.
அதிகாலை சூரியன் தனது ஒளி கரங்களை அகலமாக விரித்து கொண்டிருந்தான். சிலு-சிலுவென்ற இதமான பனி காற்று வீசியது. பச்சை பசேல் என்று வளர்ந்திருந்த பயிர்களின் நடுவே கொக்கு கூட்டம் கூட்டமாய் மெய்ந்து கொண்டிருந்தன.
பேருந்தின் ஒலி கேட்டு மொத்தமாய் பறந்தன அத்தனை கொக்கு கூட்டமும்.
அடடா! எத்தனை அழகு. ஒடும் பேருந்தில் இருந்து இறங்கி அங்கேயே இயற்கையின் அழகை பருகலாம் போல் இருந்தது. என் மொத்த மனமும் அந்த அழகிய பொழுதின் இளம் பனியாய் கரைந்து கொண்டு இருந்தது.
பசுமை கடலாய் பரவி இருந்த பயிர்களின் நடுவே கப்பலாய் பேருந்து பயணித்து கொண்டு இருந்தது. எனை மொத்தமாய் கரைத்து கொண்ட இயற்கை கடலின் பயணத்தில் நடுவே ஊர் வந்ததை உணர்த்தியது பல கரங்களை பூமியுடன் குழுக்கும் பெரிய ஆலமரம்.
அடுத்த நிறுத்ததில் இறங்கி வேகமாக நடைபோட்டேன் பெரியப்பாவின் வீடு நோக்கி.
"வாடா! நல்லா இருக்கியா? அப்பா, அம்மா நல்லா இருக்காங்கலா? ஏண்டா போனமாசம் வரல" - என்னுடைய பெரியம்மா.
"School leave கிடையாது, இப்பதான் கிடைச்சிச்சு".
"தம்பிய ஏண்டா அழைச்சிட்டு வரல?"
"அம்மா வரும் போது அழைச்சிட்டு வராங்கலாம். ஆமா, பெரியப்பா எங்க?"
"அவரு காலைலே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச பொய்டாரு. சாப்டியா? ஏய் நடுபுள்ள, தம்பீக்கு சாப்பாடு கொடுதிட்டு சீக்கிரம் அப்பாக்கு சாப்பாடு எடுத்துட்டு போ, அப்பா, நீவருவனு பாத்திட்டு இருக்க போராரு"
"பெரியம்மா, நானும் பெரியப்பா கூட வயலுலே சாப்பிட்டுக்கிறேன்" நானும், எனது அக்காலும் தூக்கு வாளியில் சாப்பாட்டை எடுத்து கொண்டு வயல் நோக்கி போய்கொண்டு இருந்தோம்.
வழியில் தென்படுபவர்கள் எல்லோரும், "யாரு? செல்வாராசு பையனா,எப்படி இருக்க?
அப்பா, அம்மா எப்படி இருக்காங்க? நீ பெரியவனா, சின்னவனா?" என நலம்விசாரித்தார்கள்.
இதுவரை நாலைந்து பேர் நலம் விசாரித்திருப்பார்கள், அவர்களில் ஒருவரை மட்டும் அடையாளம் தெரிந்தது. மற்றவர்களை "அவர்கள் யார்?" என்று என் அக்காவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.
உண்மையான அன்போடும், மிகுதியான அக்கரையோடும் பரஸ்பரம் நலம் விசாரிப்பது கிராமபுற மக்களுக்கே உரித்தான தனித்துவமான அடையாளம்.
அப்படி நம்மிடம் நலம் விசாரிக்கும் போது கிராமபுற மக்களின் மீது பற்றும், அவர்கள் மீதான மரியாதையும் அதிகமாகிறது.
இதே அக்கரையுடன் நகர்புறங்களில் நலம் விசாரிக்கப்படுவத்தில்லை. அப்படி ஒருவர் நலம் விசாரித்தால் நமக்கு பயமே தோன்றுகிறது. நகர்புறத்தில், அடுத்த வீட்டில் இருக்கிறவரின் பெயர் என்ன,எத்தனை பேர்இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரிவதில்லை.
பெரிய வாய்காலின் கரையில், இளம்காலை பொழுதில் அக்காவோடு நடந்து கொண்டு இருக்கிறேன்.
"அதோ தெரியுது பாரு ஒத்த பனமரம்,அதுலதான் பேய்ங்க நிறைய இருக்குதாம்.
நான் மதியானம் வயலுக்கு வந்தேனா, அந்த பக்கம் பாக்கவே மாட்டேன். சில சமயம்அந்த குட்டை வரையிலும் ஒடிடுவேன்"
அக்கா சொல்ல, சொல்ல அவ கைய நல்லா இருக்கமா புடிச்சிக்கிறேன். அக்காவும், நானும் கொஞ்சம் வேகமாக நடக்கிறோம்.
"அதோ நம்ம வயல் தெரியுது பாரு" என்றால் அக்கா.
பெரியப்பா அங்கு வாய்காலில் இருந்து வயலுக்கு ஏற்றம் போட்டு தண்ணீர் பாய்த்து கொண்டு இருந்தார்.
"வாடா! நல்லா இருக்கியா? 6.30 பஸ்ஸுக்கு வந்தியா? அப்பா, அம்மா நல்லா இருக்காங்கலா? தம்பி வரலையா?"
"எல்லாம் நல்லா இருக்காங்க, அவன் அடுத்த முறை அம்மாகூட வாருவான். நீங்க நல்லா இருக்கிங்கலா?"
"எனக்கு என்னடா? நான் நல்லாதான் இருந்கேன். வயல பத்தியா? நாத்து நல்லாவந்துருச்சு, இன்னும் நாலு நாள்ல நடவ ஆரம்பிக்க வேண்டியதுதான்."
"பாத்தேன். எல்லாம், நல்லா வந்திருக்கு."
"என்னடா, உர மூட்டை விலையெல்லாம் அநியாயத்துக்கு அதிகமாச்சு. மழையும் இப்ப சரியா பெய்ரதில்லை. வாய்கால்ல இந்த வருஷம் தண்ணீ கம்மியாதான்வருது. இப்படியே போன எவனும் விவசாயம் பண்ண மாட்டான்"
அவருடைய பேச்சின் துயரம் எனை ஏதோ செய்தது. "போய் வயல சுத்தி பாத்திட்டு வா" என்றார்.
வயல் சேற்றின் வாசமும், பக்கத்து வயலின் பயிரின் வாசமும் என்னை இயற்கையின் சிறகுகளில் அடக்கிவிட்டன. என்னையே மறந்தேன். புது உலகத்தில் நடந்து கொண்டு இருந்தேன். இல்லை, இல்லை மிதந்து கொண்டுஇருந்தேன். வயலின் வரப்பில் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருந்தது.
கொக்குகள் மீன்களையும், நண்டுகளையும் அழகான அலகுகளால் கொய்து கொண்டு இருந்தன. சில கொக்குகள் மீன்களை கொத்திகொண்டு பறந்தன.
இதோ நானும் கொக்குகலோடு பறந்து கொண்டு இருக்கிறேன். எவ்வளவு நேரம் இப்படியே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன் என்று தெரியவில்லை.
அக்கா வந்து, என் தோளை தொட்டு " டேய் பாஸு, எவ்வளவு நேரம் கூப்பிடுறது, அப்படி என்னதான் பாத்திட்டு இருக்க.வா சாப்பிடலாம்" என்றாள்.
தட்டில் சாதமிட்டு, சாம்பாரின் சில காய்கறிகளும், முலை கீரை கூட்டும் இருந்தன.
வயலின் வரப்பில் உட்கார்ந்தேன். பக்கத்தில் ஓடும் வரப்பு தண்ணீரில் கை கழுவிவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன்.
"பரீட்சை எப்படா, நல்லா படிக்கிறியா" என்றார் பெரியப்பா.
"பரீட்சை அடுத்த மாசம், நல்லா படிக்கிறேன்" சாப்பாடு முடிந்து மறுபடியும் தண்ணீர் பாய்ச்ச ஆயத்தமானார்.
"வீட்டுக்கு போ, நான் 3 மணிக்கு வந்திடுறேன்".
"அக்கா போகட்டும், நான் இங்கேயே இருக்கேன். நானும் உங்க கூட 3 மணிக்கு வீட்டுக்கு கிளம்புறேன்".
பெரியப்பா தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தார். அக்கா பாத்திரங்களை கழுவி எடுத்து கொண்டு "சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுடா பாஸு" என்று நடக்கலானாள்.
நான் வயலின் ஒரம் இருந்த மேட்டில், மரத்தின் நிழலில் அமர்ந்து, இயற்கையின் அழகை பருக ஆரம்பித்தேன். எத்தனை அழகு, இந்த பூமி மகள்.
இதையெல்லாம், இந்த அழகான, இனிமையான, அமைதியான, ரம்மியமான நகரவாழ்வில் தொலைந்தேனா தொலைத்தேனா!!!!