மே-11,

5 மணிக்கு மேல் பரப்புரை நிகழ்த்தக்கூடாது என்பதால் எனது நண்பன் 5.15 பேரூந்து பிடித்து மன்னார்குடி வந்து கொண்டு இருந்தான்.7.40க்கு அவனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக பேரூந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன்.அவனுடன் 4 பேர் வந்திருந்தார்கள்.

இவர்கள்,இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்தும் மிக கொடூரமான தாக்குதலை கண்டித்தும், அதற்கு தன்னால் மிக தாராளமாக எந்த அளவிற்கு உதவ முடியுமோ அந்த அளவிற்கு உதவி கொண்டிருக்கும் என் இந்தியாவை ஆளும் அரசையும் கண்டித்தும், நடந்து முடிந்த தேர்தலில் காங்கரஸும் அதன் தோழமை கட்சிகளும் தோற்க வேண்டும் என்றும் பரப்புரையில் ஈடுபட்டதால் ஆலங்குடியில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டையில் 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கலப் பணி எப்படி இருந்தது என்று கேட்டேன். நன்றாக இருந்தது என்றார்கள்.வந்த 4 பேரில் ஒரு பெண் இருந்தார்.நண்பன் அவர்களை அறிமுகப்படுத்தியபோது அந்த பெண் பாண்டிச்சேரியில் பல்கலைகழகத்தில் Phd. செய்துகொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது.நண்பனிடம் அதிர்ச்சியாக கேட்டேன் “எப்படிடா, பெண்களேல்லாம் பரப்புரைக்கு வந்தார்கள்” என்று. “பெண்கள் மட்டும் இல்லை, தங்கள் குடும்பத்துடன் இந்த பரப்புரையில் கலந்து கொண்டவர்கள் அதிகம்” என்றான்.

என் நண்பர்களுடன் வந்தவர்களை திருவாரூர் செல்லும் பேரூந்தில் ஏற்றி விட்டு நானும்,நண்பனும் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.”சிறையில் இருந்து வந்ததும் உங்கள் வீட்டிற்கு போன் பண்ணுனியா,வீட்டில் என்ன சொன்னார்கள்” என்று கேட்டேன். “வீட்டில் ஒன்னும் சொல்லவில்லை” என்றவன்,மேலும் “அவர் 30 வருஷமா மத்திய அமைச்சாராய் இருக்கிறார், அவர் தொகுதியில் மக்கள் நடந்து போக, இல்ல பேரூந்து போக கூட ஒரு ரோடு கூட மக்களுக்காக போட்டு கொடுக்க முடியாதவர், எதற்காக மத்திய அமைச்சாராக இருக்கிறாரோ” என்றான்

“இலங்கை பிரச்சனையை கிராம மக்களுக்கு எடுத்து செல்லும் போது,அந்தந்த மக்களின் தேவைகளை அறிய முடிந்தது.அந்த தொகுதியில் மக்களின் வாக்குகளை பெற ரூ.500 முதல் ரூ.1000 வரை கொடுக்கப் படுவதாகவும்” சொன்னான்.

இந்த ரூ.500-ஐ வாங்கி கொண்டு அடுத்து வரும் 5 வருஷத்திற்கு நாமேல்லாம் நாய் குட்டிகளை போல் அவர்கள் கால்களை சுற்றி சுற்றி வந்து நக்கி கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணிய போதே செல்போன் சினிங்கியது.ஊட்டியில் இருந்து நண்பன் அழைத்திருந்தான். “என்னடா, உங்கள் தொகுதியில் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்” என்றேன். “பணமெல்லாம் கிடையாதுடா” என்றான்.
“அட நாடு அதுக்குள்ள திருந்திட்டா” என்றேன். “அதெல்லாம் இப்போ நடக்காது, பணத்திற்கு பதிலாக செல்போன் தராங்க” என்றான். “உனக்கு கொடுத்தாங்கலா” என்றேன். “அது எப்படி வாங்காம இருப்பேன்.அதெல்லாம் நம்ம பணம். இப்போ செல்போன் கொடுக்குற மாதிரி கொடுத்திட்டு, பின்னாடி அவன் 5 செல்போன் கம்பெனி ஆரம்பிச்சிடுவான்.நேத்து தான் தடைசெய்யப்பட்ட இலங்கை தமிழர்களின் வாழ்கையை பதிவு செய்த “இறுதி யுத்தம்” CD பார்த்தேன்.நேத்து என்னால சாப்பிட முடியல” என்றான்.

“இந்த மாதிரி அப்பாவி மக்கள அங்க சாகுறதிர்கு துணைபோற இந்த அரசு தோற்கனும்டா. உனக்கு தெரிந்தவர்கள், சொந்தங்கள் எல்லாரிடத்திலும் எடுத்து சொல்லி காங்கிரஸ் கூட்டனிக்கு ஒட்டு போட வேண்டாம் என்று சொல்லு.சரிடா நாம அப்புறம் பேசுவோம்” என்று செல்போனை அனைத்தேன்.

என்னுடன் நடந்து வந்த நண்பனிடம் கேட்டேன் “ஏண்டா, இன்னமும் மக்கள் தொன்று தொட்டு வரும் தங்களுடைய குடும்ப பெயர்களை போல்,என்னுடைய அப்பா,தாத்தா இரட்டை இலைக்குதான் ஒட்டு போட்டார்கள்,அதனால் நானும் இரட்டை இலைக்குதான் போடுவேன் என்று சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்போதான் திருந்த போராங்களோ”. இதற்கு நண்பன் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது.

“சிவகங்கை தொகுதியில் சில கிராமங்களுக்கு சென்றிருந்தேன் அங்கு, எங்க கட்சிக்குதான் ஓட்டு போடுவேன் என்று சாமி படத்திற்கு முன்பாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய சொல்கிறார்களாம் ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள். தமிழன் பக்தி பயத்தை பயன்படுத்தி இந்த மாதிரி காட்டுமிராண்டி தனத்தை கையாலும் அரசியில் வாதிகளுக்கு நாமெல்லாம் ஒட்டு போட்டு வெற்றி பெற வைத்தால் நாடு என்னவாகும்” என்றால்.

மொத்தத்தில் இன்று அரசியலில் நிறைய பன்றி கூட்டங்கள் அதிகமாகி விட்டன. இந்த பதிவை எழுதி கொண்டிருக்கும் போது கரூர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து நண்பன் ஒருவன் செல்போனில் அழைத்திருந்தான்.அவன் கிராமத்தில் ஒரு ஒட்டிற்கு ரூ.500 ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள். ரூ.100
ஆளும் கட்சியும் கொடுத்தார்களாம்.

கொல்லை அடிப்பவனின் எவன் குறைவாக கொல்லையடிக்கிறானோ அவனுக்கு ஒட்டு போடும் நிலைமை வந்துவிட்டது. இப்படியே போனால் எந்நாடு என்னவாகுமோ.

-இப்படிக்கு
ஓட்டு போட்டே ஓட்டாண்டியாய் போனவர்கள் சார்பாக
செ.பாஸ்கரன்

நான் நன்றாக இருக்கிறேன், என்னகென்ன குறை ?!!!...
என் சகோதரர்கள் வெட்டப்படும்,
சகோதரிகள் கற்பழிக்கப்பட்டும், என் தமிழ்
குழந்தைகள் தலையையும் கைகளையும்
கால்களையும் தொலைத்துவிட்டு
சிதறிகிடப்பதை கண்டும் கூட செயலையோ
குரலையோ உயர்த்தும் என்
உரிமைகள் பரிக்கப்படாலும் - நான்
நன்றாகவே இருக்கிறேன், என்னகென்ன குறை ?

நரிகள் ஆண்டாலும், பாம்புகள் ஆண்டாலும்
நானும் என் பெற்றோரும் இங்கு
பாதுகாப்பாகவே இருக்கிறோம்

பின்னே !!
என் பாதுகாபிற்காக என்னை இன்றுவரை
சந்தித்திராத, என்னோடு பிறக்காத என்
சகோதரர்கள்தானே தன்னை பலியிட்டு
என்னை காத்து வருகிறார்கள் !!
வேறு எந்த நாடும் இலங்கையில் கால் வைக்க
கூடாது என்பதற்காக "சின்ன வீடு" இலங்கையை,
என் தேசம் வெட்கத்தை விட்டு எப்போதும் "தாஜா"
செய்யட்டும் - அதற்கு என் தமிழ் ரத்தம்தான் தரையெல்லாம்
பாய வேண்டுமா ??...

நாம் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ...
தினமும் 1 மணிநேரம் கடற்கரையில் ஓடினால்
100 வயது வரை வாழலாமாம் !!!...
அவர்கள் ஒரு நாள், ஒரே ஒருநாள்
சுதந்திரமாக வாழ்ந்துவிட வேண்டும் என்று
கழுத்தில் விஷத்தோடு கல்லிலும் முள்ளிலும்
ஓடுகிறார்களே அதைபோல !!!!...

யார் சொன்னது என் கடமைகள் எனக்கு தெரியாது என்று ??
"தமிழே, தாயகமே" என்று யார் முழங்கினாலும் கொடிபிடிக்கிறேனே
அது என் ஜனநாயக கடமை இல்லையா ?
இரவு எத்தனை மணி ஆனாலும் IPL ஆட்டத்தை பார்த்துவிட்டுதான்
மறுவேலை இது என் தேசிய உணர்வு இல்லையா ??
திரையில் தோன்றும் கூத்தாடிகளுக்கு
மாலை மரியதையோடு பாலாபிஷேகம்
செய்வோம் அது எங்கள் பக்தி பரவச உணர்வு இல்லையா ??

அரைகுறை ஆடை 'நிர்வாண கூத்தாடிகளான'
நடிகைகளுக்கு நாங்கள் கட்டாத கோவில்களா ??
இதைவிட வேறு என்ன பொறுப்புகளை நாங்கள் செய்யவேண்டும்
என்று நினைகிறீர்கள் ??

இதுகளும் இதுகளின் மன்றங்களும் என்
தமிழனுக்கு செய்யாத தொண்டா ??? !!!

என்னிடம் 'டிக்கெட்' பிட்சைஎடுக்கும் நடிகனையும்
ஓட்டு பிட்சைஎடுக்கும் தலைவரையும் நான்
உயிரினும் மேலாக கருதுகிறேன்...
பின்னே !!
என் இனம் தினம் தினம் சிதறி அழிவது கண்டு
தாளமுடியாமல், உறங்கமுடியாமல் பல
மாதங்களாக உயிர் வாழ்கிறார்கள் !!

உலகிலேயே கேட்பாரற்று மிக மிக மலிவாக
கிடைப்பது தமிழனின் உயிர்தான் ... !!!
"முன் தோன்றிய மூத்தகுடிமகன்" என்று சொல்லிகொண்டாலும்
நடத்தப்படுவது என்னவோ "மூத்தகுடி-மகன்" போலதான் ....

தமிழ் தூண்களின் திறமையும் திட்டமிடலும்
'மானாட மயிலாடவில்' தெரிகிறது ..
' ஸ்பெக்ட்ரத்தில்' கலர் கலராய் தெரிகிறது
தமிழனை காப்பாற்ற நாற்பதும் பேரும்
என்னமாய் உழைக்கிறார்கள் !!...

முதலில் எல்லோருக்கும் டிவி தருவதுதான் நல்லது !!
அப்போதுதான் என் இனம், என் குழந்தைகள் தினமும்
ரத்தம் தெறித்து சாவதை பார்த்து ரசிக்கலாம் ...
பங்குசந்தையையும்,
அமெரிக்க பொருளாதாரத்தையும்,
மென்பொருள் ஏற்ற இரக்கத்தையும்,
IPL ஆட்டத்தையும்,
அற்புத நடிகர்களையும்,
அரைநிர்வாண நடிகைகளையும் உற்று கவணிக்கலாம்
ஒரு காலத்தில் இவை மட்டும்தான் நம்மோடு
இருக்கும் - நம் இனம் இருக்காது ...

கொஞ்சமும் உணர்வில்லாமல் பதற்றப்படாமல்
எப்படி இதை நம்மால் பார்க்க முடிகிறது ...?
என் ஜனநாயக நாட்டில் இதற்காக பேசத்தான் முடியாது,
கோபப்படதான் கையாலாகாது.
வருத்தபடவோ அழவோ கூட இயலாதா ??

இயலாது இயலாது ..... மறத்தமிழன்...
வீரத்தை வெள்ளையனுக்கும் கற்றுதந்த தமிழன் எப்படி அழுவான் ??..

நம் தந்தையின் நெஞ்சில் குண்டுகள் பாயும்போதும் ,
தாயின் உடலில் தீ பரவும்போதும்,
சகோதரனின் உறுப்புக்கள் வெட்டப்படும்போதும்,
தங்கைகள் கற்பழிக்கப்படும்போதும்,
குழந்தைகளை திசைக்கு ஒன்றாக பிய்த்து எறியும்போதும்,
கொதிக்கும் 'தார்'ல் எறியும்போதும்
இப்படிதான் பார்த்துக்கொண்டு இருப்போமா ??

என்னையே நான் கேட்டுகொள்கிறேன்
"மானத்தமிழனே.. மானத்தமிழனே... நீ இப்போது ஈனத்தமிழனே" என்று...

இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தும், கணவான்களே,
புத்தர்களே....
இந்திய தலைவர்களின் உயிர்தான் உயிர்
மற்றவன் உயிர் எல்லாம் மயிர் என்று சொல்லும் மகாத்மாக்களே ...
"தமிழன்" என்பதை மறந்துவிட்டு "மனிதன்" என்ற
குறைந்தபட்ச தகுதியையாவது தந்து
நெஞ்சில் "கை" வைத்து சொல்லுங்கள்
அங்கே நடப்பதெல்லாம் சரிதானா ???
"சரி" என்று நீங்கள் சொன்னால் உங்கள்
ரத்தத்தை பரிசோதித்து கொள்ளுங்கள்
அது ரத்தமாக இல்லாமல் இருக்ககூடும் !!!

"என்னை கடலிலே தூக்கி போட்டாலும்
கட்டுமரமாக தமிழர்களை காப்பேன் "
ஆகா!!
என்ன அற்புதம் !!
மீன் பிடிக்கசென்று குண்டடிபட்டு கடல்
நீரில் துடிதுடித்து இறந்து 'கட்டைமரமாய்'
தினம் தினம் மிதக்கும் தமிழர்களில் இந்த
'கட்டுமரம்' எத்தனைபேரை காப்பாற்றிஇருக்கிறது தெரியுமா ??

"தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா" என்பது எனக்கு மட்டும்தானா ??
அவர்கள் பேசுவது தமிழ் என்றால்
அவர்களும் தமிழர்கள்தானே ??
அவர்கள் மட்டும்
" தமிழன் என்று சொல்லடா
தன்மானம் இழந்து சாவடா" என்று சொல்லி
பரதேசியாய் வாழ்வதா ??

இந்த தமிழ் மண்ணில்,
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களும்,
கட்டபொம்முவும், மருது வீரர்களும் ஆண்ட மண்ணில்,
வள்ளுவனும், கம்பனும், பாரதியும் வாழ்ந்த மண்ணில்,
பெரியாரும், அண்ணாவும், காமராஜரும், ஜீவாவும்
நெறிபடுத்திய இம்மண்ணில்தான்
நானும் பிறந்துவிட்டேன் என்று
கர்வத்தோடு தலைநிமிர்ந்துதான் நின்றேன்..

என்குலம் என் முன்னாலேயே
அழிவது கண்டு எதுவும் இயலாமல் நிற்கையில்
குனிந்ததலை நிமிரவே இல்லை...

இந்த தன்மான தலைவர்களில் ஒருவர்
இன்று இருந்தால் கூட இதைபார்த்துகொண்டு இருப்பார்களா ?
டெல்லி நாற்காலியின் முன்னால் விழுந்து கிடந்திருப்பார்களா ??

டெல்லில் இருந்து ஈழத்தமிழர்களை நோக்கி திரும்பிய
துப்பாக்கிகள் - எங்கள்
தமிழகதமிழர்களை நோக்கி திரும்ப அதிக காலமாகாது - என்று
தெரிந்தும்கூட
"நாங்களும் உன் குழந்தைகள்தான்" என்று கூறி
"பாசமிகு" பாரதமாதாவின் மடியில்
நம்பிக்கையுடன் தலை சாய்கிறோம்..

எந்த மானிலத்தில் இழவு என்றாலும்
"அடடா ..." என்று பரிதாபப்படும் தமிழன்தான்
முன்னால்நின்று அனைத்தும் செய்கிறான்.
குஜராத் பூகம்ப நிவாரண உதவியே சான்று.
இன்று வீடெல்லாம் பிணமாய்,
என் தமிழினமே துடிக்கிறதே
எந்த மானிலத்தில் இதற்கான குரல் ஒலிக்கிறது ??

குண்டு வைத்தவனையெல்லாம் மரியாதையாக
நடத்தும் மனிதாபிமான செம்மல்கள்,
"இந்தியாதான் எல்லாமே" என்று எண்ணிக்கொண்டு,
தன் மொழிக்காக, அடையாளத்திற்காக,
சுயமரியாதைக்காக, தன்மானத்துடன் போராடும்
வர்க்கத்தை "தீவிரவாதிகள்" என்பதா ???...

அட தமிழா.. தமிழா...
எப்போதோ விடிந்துவிட்டது
இன்னுமா தூங்குகிறாய், எழுந்திரு !!!...
உன்னை பந்தியிலேயே அமரவேண்டாம் என்றாலும்
நீயோ "என் இழை சரியில்லை" என்கிறாய்....!

ஓ .... இந்தியத்தாயே.... இந்தியத்தாயே..
பிறந்தது தமிழ்மண் என்றாலும்,
பேசுவது என் 'உயிர்தமிழ்' என்றாலும்
நாங்களும் கூட இந்தியர்கள்தான்....
கேட்கிறதா, இல்லை உன் மொழியில் சொன்னால்தான் கேட்குமா ??
நாங்களும் கூட இந்தியர்கள்தான்....


-இப்படிக்கு சக்திவேல் லோகநாதன்



அடித்தால் வதைத்தால் பட்டினிப் போட்டால்
பலாத்காரத்திற்கு உட்படுத்தினால்
குடும்பவன்முறை சட்டம் பாயுமாம்!

வெளிக்காயம் படாமல் இரத்ததுளிகள் சிதறாமல்
உள்ளம் ஒடிந்து உயிர்சிதைத்து
வன்சொல் வீசும் வன்கொடுமைக்கு

என்னச் சட்டம் என யோசித்த போது
வாய்மூடி மௌனித்து அன்புசட்டத்தில் வளைக்கப்பார்த்தேன்
தோல்விதான் தொடர்கதையானது

நான்...
மரணித்தாலும் மறுசுழற்சிபெற்று
என் அன்புச்சிறைக்குள்
அடைக்காமல் விடமாட்டேன் உன்னை..


-இப்படிக்கு ஸ்ரீவித்யா

அப்பா

இவனுங்க பம்பரத்துக்கு மட்டும் எப்படி இத்த பெரிய ஆணி!. ஒரு வேள தினம் தினம் வளருதா?'னு சந்தேகமாவே இருக்கும். இவனுங்கல்லாம் 'எடப்பாடி' ஸ்கூல்ல படிக்கறதால 'மச்சி கடை'ல இருந்து ஸ்பெஷலா சொல்லி வாங்கிட்டு வராங்களாம் !. நல்லா கூரா பளபளன்னு மின்னும், விட்டோம்னா சும்மா பூச்சியாட்டம் சுத்தும். என்னோட பம்பரம் மட்டும் ஏனோ 'தக்கடதை' போட்டுகிட்டே இருக்கும். அது சுத்தரப்ப சாட்டை 'திரி'ய ஆணில வச்சோம்னா உடனே 'எலி' பிடிக்கும். என் பம்பரத்துக்கு பேரே 'எலிபொறி'னு வச்சுட்டானுங்க. சைக்கிள் ஸ்டாண்டுல இருந்து ஊர்ல இருக்குற எல்லா தண்ணீர் பைப்பு வரைக்கும் ஆணி பிடுங்கத்தான் வச்சுருக்கேன். எத்தன தடவ மாத்தி மாத்தி ஆணியடிசாலும் அதே 'தக்கடதை' அதே 'எலிபிடி'.

வேட்டைக்கு போறமாதிரி காலைல பம்பரமும் சாடையும் எடுத்துட்டு புளியமரத்தடிக்கு போனோம்னா திரும்பி வரப்ப ராத்திரியாகியிருக்கும் இல்லனா பம்பரம் விரிசலோடிஇருக்கும், அதுவும் இல்லனா, அந்த பாட்டி வீடுக்குள்ள பம்பரம் போயிருக்கும், அது 'வாழ்த்து மழைய' வசை பாடிகிட்டு இருக்கும். உள்ள போன பம்பரம் சாப்பாட்டு குண்டாமேல ஏறி சுத்திகிட்டு இருந்ததா அந்த பாட்டி வந்து வந்து சத்தியமே பண்ணும். அப்பவெல்லாம் சத்தியமா நா விடற பம்பரம் தரைலயே சுத்தாது அப்புறம் எப்படி சாப்பாட்டு குண்டாமேல ஏறி .. ??

காலைல போறப்ப புதுப்பொண்ணு மாதிரி இருக்கிற என்னோட பம்பரத்த திரும்பி வரப்ப சொறிநாய் மாதிரி செஞ்சி வச்சுருவாங்க. இதோட புது சாயம் அவனுங்க பம்பர ஆணில ஒட்டியிருகிறத மூஞ்சி முன்னால காட்டி காட்டி ஆடுவானுங்க. எல்லாரும் என்னோட பெரிய வயசு பசங்கதான், தைரியமாதான் போவேன் ஆனா ஒரோருத்தனும் கைய வானத்து வரைக்கும் தூக்கி குறிபாத்து அடிக்கறப்ப அது 'ம்ம்ம்ம்'னு பயமுறுத்திகிட்டே சுத்தும். என்னோட பம்பரம் பெரும்பாலும் ‘சரண்டர்' ஆகி வட்டத்துக்குள்ளயே ஆணிய நீட்டி படுத்துட்டு இருக்கும்.

லேசா தூறல் போட ஆரம்பிச்சதும் ஆட்டமும் சூடு பிடிக்க ஆரம்பிச்சுடும். அது யாருக்கோ வருதுங்கரமாதிரி மதிக்காம எல்லோரும் தீவிரமா விளையாட ஆரம்பிப்போம்.

"டேய் கட்ட உள்ள இருக்குது மரியாதையா உள்ளயே வையி.. "
"இல்ல கட்ட வெளியில .."
"ஒழுங்கா பாரு ஆணி கோட்டுமேல படுத்துருக்கு"
"இல்லல்ல கட்ட வெளியிலதான்.."

குமாரும் சந்துருவும் சண்ட போட்டுக்கிட்டு இருக்காங்க..
"இங்க வட்டம் அழிஞ்சிருக்கு, ஆனா கட்ட வெளியிலதான்".
"இல்லல்ல நீ ரவிய கூப்டு, புதுசா இது மேல வட்டம் போடட்டும் அப்ப தெரியும்.."

உடனே வட்டம் போடற ஸ்பெஷலிஸ்ட் 'ரவி' வரவழைக்கப்பட அவன் 'காம்ப்பஸ்' கூட இல்லாம அழகா வட்டம் போட்டான். ஏனோ ஆணிகிட்ட வர்றப்ப மட்டும் அவன் கை கொஞ்சம் நடுங்கிச்சு. கடைசியா 'கட்ட உள்ளதான்'னு பரபரப்பு தீர்ப்பு வர, குமார் அத ஒத்துக்க மறுக்க ஆட்டம் மறு தேதி சொல்லாமலே நிறுத்தப்பட்டது.

ஆமா நா இன்னிக்கு விளையாட போகல .. என்னமோ தலைல பாரமா இருக்கு உடம்பெல்லாம் சுடுது. ஒருவேளை நேத்து மழைல நனைஞ்சதால இருக்குமா?. யாருக்கும் தெரியாம படுத்துக்கணும், முக்கியமா எங்க அப்பாவுக்கு தெரியவே கூடாது.

"என்னாச்சாம் இவனுக்கு" உள்ள வந்ததும் கேட்கறார்.
"என்னமோ சுருண்டு சுருண்டு காலைல இருந்தே படுத்துட்டே இருக்கறானே. கேட்டா சொன்னதான .."
"என்னாச்சுப்பா ?"
" ஒண்ணுமில்லப்பா சும்மா குளிருதுன்னு படுத்துட்டு இருக்கேன்.."
"குளிருதா இப்படி நெருப்பாட்டம் கொதிக்குது. நேத்து கழுதமாதிரி குதிக்கிறப்பவே நெனச்சேன். பையன இப்படி போட்டுட்டு என்னதான் பண்ணறா இவ?." என்னால இவங்களுக்குள்ள ஒரு சின்ன சண்ட உதயமாகி உடனே அஸ்தமனமாகும்.

வேக வேகமா போயி 'பாரதி கடை'ல மாத்திர வாங்கிட்டு வருவாரு. அது மளிகை கடைதான் ஆனா 'காய்ச்சல் மாத்திரை'னு சொன்னா பாரதிக்கு தெரியும், 'பாராசிடமால்' தருவாரு ஆனா 'பாராசிடமால்'னு கேட்டா அவருக்கு தெரியாது. எங்க கிராமத்தோட 'மல்டி டிபார்ட்மெண்டல்' ஸ்டோர். அங்க எல்லாம் கிடைக்கும் ஆனா விலைதான் MRP க்கு கொஞ்சம் மேல இருக்கும்.

"இப்போதைக்கு இந்த மாத்தரைய மட்டும் போட்டுக்க, நேத்து விட்டுட்டு வந்த வேலை கொஞ்சம் மிச்சம் இருக்குது, அதையும் முடிச்சிட்டு பணம் வாங்கிட்டு வந்துர்றேன்,நாம சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு போலாம்”,னு சொல்லிட்டு அவசர அவசரமா அந்த பழைய சைக்கிள எடுத்துகிட்டு நாளைக்கு செய்ய வேண்டிய வேலைய ஏனோ இன்னிக்கே முடிக்க கிளம்புறார். அதே அவசரத்தோட களைத்துப்போய் மறுபடியும் மாலைதான் வீடுதிரும்புகிறார். தலையில் மறுபடியும் கைவைத்து பார்த்து ‘தற்போதைய நிலவரம்” அறிந்து சொல்கிறார். “எதுக்கும் ஒரு ஊசிய போட்டுட்டு வந்துரலாம்,நீ வேற சட்டையும்,டிராயரும் போட்டுட்டு கிளம்பு”.

ஒரு இடத்துல இருந்த காய்ச்சல் ஊசின்னு சொன்னதும் உடம்பெல்லாம் குப்புன்னு பரவுது. அத நினைச்சாலே ஊசி போடுற இடம் போடாமலே வலிக்கும். எனக்கு கைல சதை பத்தலையாம் அதனால எங்க ஊசிபோட போனாலும் ‘ஆல்டர்னேட்’ இடந்தான் எல்லா டாக்டரும் தேர்ந்தெடுப்பாங்க.

“அப்பா ஊசி வேண்டாம்பா..”
“சரி அவருகிட்ட ஊசி வேணாம்,மாத்தரையே தரச்சொல்றேன்,நீ கிளம்பு”

நான் கிளம்பியதும் வீட்டில இருக்கும் இரண்டு ‘துண்டு’ல ஒன்று என் தலைமீது இருக்கும், மழையில் நனையாமல் இருக்க. இன்னோரு துண்டு நான்காக மடித்து சைக்கிள் கேரியரில் போட்டு அதுமேல என்னை உட்கார வைப்பாரு,சிம்மாசனம் மாதிரி நானும் ஏறி உட்கார்ந்துக்குவேன். அப்பா சைக்கிள்ள உட்கார்ந்து அவர பிடிச்சுக்கிட்டு போர இந்த சந்தர்ப்பம் எனக்கு காய்ச்சல் வந்தாதான் கிடைக்கும் !!.

என்னோட ரெண்டு காலையும் சக்கர கம்பியில படாம பார்த்து பின்னி வைப்பார். “அங்க போறவரைக்கும் கால எடுக்காம இப்படியே உட்கார்ந்துட்டு வரணும்”னு சொல்லிட்டு மழைத்தூறல்ல என் தலையில் டவலைப் போட்டுட்டு வெறும் தலையோடு அவர் முச்சிரைக்க சைக்கிள மிதிப்பாரு.அந்த சீட்டு வேற ‘கீசி,கீசி’னு சத்தம் போட்டுட்டே வரும்.அது எனக்கு “ஊசி,ஊசி” னு தான் கேட்கும்.

“ஒண்ணும் படிக்கிற மாதிரி தெரியல,எந்த நேரமும் கையில பம்பரம்,கில்லி..” “பாதில வந்தா தோத்தாங்குளி, தோத்தாங்குளி’னு பெரிய பசங்களெல்லாம் சொல்றாங்கப்பா ! “
“டியூசன் கியூசன் ஒன்னும் போயிடாத..”
“அவங்கதான் என்னை பொய்ஏமாத்தி பொய்ஏமாத்தி என்னோட கட்டைய உடைக்கிறாங்க. மழையிலயும் கூட விடல எனக்கு பிடிக்காத விஷயத்தைப் பத்தித்தான் அவரு கேட்பாரு,

எனக்கு பிடித்த விஷயத்திலிருந்துதான் பதில் தருவேன்! அதனால கேள்வியும் பதிலும் கொஞ்சம் கொஞ்சம் சம்மந்தம் இல்லாமதான் இருக்கும்.

அவர் ‘எடப்பாடி’ய நெருங்க நெருங்க காய்ச்சல் விட இந்த பயம்தான் எகிறி எகிறி வரும்.

“இல்லப்பா ஒழுங்காதான் படிக்கிறேன். இதுலயும் கூட பர்ஸ்ட் ரேங்க் வந்துரும்ப்பா, பேபியக்கா காலாண்டுக்கு மேலதான் டியூசன் எடுப்பாங்கலாம், டியூசன் ஃபீஸ் கூட எனக்கு இருபத்தஞ்சு ரூபாயாம், குட்டிக்கு இருபதாம்”

அவர் அப்ப கேட்ட கேள்விக்கு பதில் இப்ப வரும்.எல்லாம் ஒரு காரணமாத்தான் !.

“சரிடா நா அவர்ட்ட ஊசிவேணாம், மாத்திரையே போதும்னு சொல்றேன்”, எப்படியோ அப்பா புரிஞ்சுக்குவாரு !! .

அவருக்கு ஹாஸ்பிடல் என்பதெல்லாம் இந்த ‘முத்தையா மெடிக்கல்ஸ்’ தான். அங்குதான் கூட்டிட்டுபோவார்.சகல வியாதிக்கும் அங்கே மருந்திருக்கும் என்பது இவர் நம்பிக்கை. உள்ள தனியா ஒரு ரூம் அதுல ஒரே ஒரு நீளமான பெஞ்சு இதுதான் ஹாஸ்பிடல், வெளில மெடிக்கல்ஸ். அந்த ‘புளு’ கலர் பெயர் பலகைய பாக்கறபோதே ஒன் பாத்ரூம்போற அளவுக்கு பயம் வரும். “அப்பாப்பா மாத்திர போதும்னு..”

“உடனே அப்பா முத்தையாகிட்ட ஏதோ சத்தமில்லாம பேசிட்டு “ இல்லடா நா கேட்டனே, எறும்பு கடிக்கிரமாதிரிதான் இருக்குமாம், இருந்தாலும் மாத்தரதான் தரசொல்லிருக்கறன் “ என்பாரு. எந்த ஊர்ல எறும்பு ‘சிரஞ்ச்’ வச்சிகிட்டு கடிக்குதுன்னுதான் தெரியல.

“பையனுக்கு வயசு என்னங்க லோகு?”
“பண்ணண்டு ஆகுதுங்க !”

“கல்யாணம் செய்யிற வயசாகுது இப்படி பயப்படுறயே, இப்ப நீ வரப்ப வெளில போன சின்ன பையன், பயப்புடாம ஊசி போட்டுட்டு போறான் சரி, நான் ஊசி போடல, டிராயர கழட்டிட்டு பெஞ்சு மேல ஏரி குப்புற படு”.

மாத்திர தர்றதுக்கு எதுக்கு நான் டிராயர கழட்டிட்டு குப்புர படுக்கனும். அவங்க சூழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமா விளங்க நான் அழ ஆரம்பிக்கும் போதே,அப்பா சொல்வாரு “நீ மொதல்ல படுடா, செக்கப்தான் செய்யப்போறாரு “னு சொன்னபடியே குப்புறபடுத்து கண்ண இறுக்கமா மூடிட்டு ,அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மெல்ல திறந்து பாக்கறதுக்குள்ள, என்னோட ரெண்டு காலையும் அப்பா இறுக்கமா பிடிச்சிருப்பார். “சும்மா, எறும்பு கடிக்கிரமாதிரிதான் இருக்கும்”னு மறுபடியும் ஒரு பொய்ய சொல்லச்சொல்ல அந்த ‘பாவச்செயல்’ நடந்தே விடும்.

“நம்பிக்கை துரோகிகளா!’ங்கரமாதிரி ரெண்டு பேரையும் பார்ப்பேன். ஏதோ ஒரு டீக்கடையில கொஞ்சம் சுடுதண்ணி வாங்கி மாத்திரைய சாப்பிடவைத்து, அதோட ரெண்டு ஆரஞ்சு பழம், ஒரு ‘மில்கா’ பண்ணுன் வாங்கித்த்ந்து அதேபோல சைக்கிள்ல உட்காரவச்சு “நாளைக்கு மறுபடியும் மழையில வெளையாடணும், என்ன?”னு கேட்டுட்டே வருவார்.காய்ச்சலும் குறைஞ்சிட்டே வரும். நாளைக்கு மறுபடியும் போருக்கு கெளம்பிரலாம்.

அப்பாவுடனான என் ‘ஊசி நாட்களின்’ நினைவுகள் இத்தனை வருடங்களுக்கு பிறகு கண்ணீர்த்திரையாய் தேங்கி நிற்கிறது.” நான் கேட்டுட்டேன்பா, பயப்பட தேவையில்லையாம், சும்மா எறும்பு கடிக்கிரமாதிரிதான் இருக்குமாம்’னு அதே பொய்யை சொல்லி அவரை ‘ஆஃபரேஷன்’ தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு வெளியே காத்திருக்குபோது.

-சக்திவேல் லோகநாதன்

இவன் எத்தனை வருஷமா எங்கள் வீட்ல இருகான்னு என்னால சரியா சொல்ல முடியாது. 'நீ பிறக்கறதுக்கு முன்னால இருந்தே இது இங்கதான் இருக்குது' ன்னு என் அம்மா சொன்னதா ஞாபகம். அது ஏதோ ஒரு மார்கழி மாதத்துல அப்பா கோயம்புத்தூர் போயிட்டு வர்றப்ப இத கையில தூக்கிட்டு வந்தாராம். இவன பாக்கற போதெல்லாம் "உனக்கும் எனக்கும் ஒரே வயதாடா பொடிபயலே?"னு கேட்கத்தோன்றும். இவனுக்கு வளர்ச்சியெல்லாம் இருக்காது ன்னு என்னுடைய சின்ன வயதிலேயே, யாரும் சொல்லி கொடுக்காமலேயே தெரிந்து கொண்டேன்.

இவன் எங்க ஈஸ்வர பெரியப்பா வீட்டில், இல்லையென்றால் வெங்கிடு சித்தப்பா வீட்டுல இருக்கிறதுகளைப்போல இல்லாம வித்தியாசமா இருப்பான். மேலெல்லாம் இரத்த சிவப்பு கலர்ல. எம்மேலயும் இவன் கலரு வருமானு உரசி உரசி பார்ப்பேன், ஒன்னும் நடக்காது. படுத்துட்டு இருக்கிறதவிட இந்த தவளை மாதிரி குத்த வச்சிகிட்டு உட்காருவான் பாரு.அடடா! அவ்வளவு அருமையாதான் இருப்பான்.

"இதுகிட்ட மனுஷன் போவானா?"னு அவரவர் ஒதுங்கிவிட எனக்கு மட்டும் செல்லமாயிட்டான். சொல்ல போனால் இவனை என்னோட சுயநலத்திற்கு நான் பயன்படுத்தி கொண்டதெல்லாம் பாவம் இவனுக்கு தெரியாது.

ஆனாலும் சிலநேரத்துல கொதிச்சுத்தான் போயிடுவான். தெரிஞ்சவங்க யாராச்சும் பக்கத்துல இருந்தேதான் ஆகனும். "இப்படி ஒரு கண்றாவி தேவையா?"னு அம்மா கேட்டத நானும் கண்டுக்கல. கொஞ்சம் ஏமாந்தோம்னா அவ்வளவுதான், என்ன கிடைக்கிதோ அத அப்படியே கபளீகரம் பண்ணிடுவான்.
எங்கப்பா என்னமோ மெக்கானிக்தான் தான்,ஆனா இந்த பாவிபயதான் எனக்கு திருபுளியையும், டெஸ்டரையும் எப்படி 'யூஸ்' பண்ணனும்னு சொல்லிகொடுத்தான். அதுக்கப்புறம் நான் சகலத்தையும் கத்துக்கிட்டு இவனை போட்டு படுத்தி எடுத்துட்டேன். எங்கிட்ட இத்தன அடி வாங்குறானே, ஏதாச்சும் ஒரு வார்த்தை? 'ம்கூம்'.

ஒருநாள் என்னாச்சுங்கறிங்க? ஒரு புது சட்டைய போய் வாங்கி இவங்கிட்ட கொடுத்தா, அடுத்த நிமிஷமே அதோட ஒரு கைய பிச்சு சின்னாபின்னமாக்கி குண்டு விழுந்த இலங்கை மாதிரி ஆக்கி வச்சிருக்கான். அன்னிக்கு வாங்குனான் என்கிட்ட பேயடி, அதுக்கப்புறம் ஒரு மாசம் நா அவன் கிட்டகூட போகலியே. கெடக்கட்டும் அப்பதான் புத்திவரும்னு விட்டுடேன். என்னமோ மனசுதான் கேட்கவே மாட்டேனுச்சி, அப்புறமா போனா போகுதுனு நானே போயி அவன சேத்திகிட்டேன். அப்புறம், அவன் இல்லனா எனக்கு எப்படி பொழுதுபோகும்.

இவனுக்கு இத்தபெரிய வாலு மொலச்சிருக்குனு யாருக்குமே தெரியாது, அந்தமாதிரிதான் வெளியில காட்டிக்குவான்.ஆனா எனக்குதான தெரியும் இவனப்பத்தி முழுசா!!! சனி,ஞாயிறு லீவு விட்டா இந்த புளியமரமே கதிண்ணு கெடந்தாலும், இவன எதுலயும் சேத்துகிறதில்ல. இந்த திங்ககிழமை அவசரஅவசரமா குளிச்சிட்டு வந்து ஈரத்தலையோட நிக்கும்போதுதான் இவன் ஞாபகம் வரும் 'எங்கடா இருக்குற நீ 'ன்னு மனசு அடிச்சுகிட்டே தேடுவேன்.

இப்படித்தான் ஒருநாளு நான் இல்லாத நேரத்துல இந்த வெள்ளியங்கிரி பையன் வந்து தொட்டிருக்கான்.அவ்வளவுதான், கணக்கு வழக்கில்லாமல் அடிய வாங்கி கட்டிக்கிட்டு போயிருக்கான். பின்ன, இவன் எனக்கு மட்டுந்தான் அடங்குவான். நா சொல்றததான் கேட்பான். அதுக்கபுறம் வெள்ளிய எப்ப கூப்டாலும் இன்னும் அவன் 'அந்த சனியன் இருக்கா?'னு கேட்பான். 'சின்ன சின்ன புள்ளைக இருக்கற வீட்டுல இந்த தொல்லையெல்லாம் எதுக்கு?' ன்னு என் அம்மாவோட போர் முரசைக் கூட கேக்காம 'போம்மா, இதுல்லாம இன்னும் எத்தனைபேர் இருக்காங்க'னு சொல்லி இவனுக்காக வாதாடியிருக்கிறேன்.

மெல்ல மெல்ல வருஷங்கதான் ஓடிபோச்சு, நானும் ஸ்கூல் முடிச்சு, காலேஜ் முடிச்சு, வேலைக்கும் வந்தாச்சு. நான் காலேஜ் படிக்கும்போதே அவனுக்கு முடியாமல் போயிருச்சாம். நா இருந்தாலாவது பாத்துப்பேன்,பாவம் அவன். கடைசியா ஊருக்கு போனப்ப அவன பார்தேன், வீடுபூரா தேடினதுக்கப்புறம் நான் ஒரு மூலையில அதே பழையமாதிரி குத்தவச்சு உட்கார்ந்துட்டு இருந்தான். அந்த கலரெல்லாம் போயி கருத்து போய்ட்டான். கிட்டதட்ட படுத்த படுக்கைதான். ரொம்ப பரிதாபமா இருந்துச்சு.அப்படியே மெல்ல அவனோட முகத்த தடவிக்கொடுத்தேன். அப்ப அவன் என் கை மேல சாய்ந்தது என்னவோபோல இருந்துச்சு.

கொஞ்ச கொஞ்சமா என்னோட வேலை அவனை மறக்கடித்தே விட்டது. போனவாரம் அடையாருல ஒரு கடைக்குப்போய் 'Mixie' வாங்கிட்டு அப்படியே 'can u show me a latest model Philips ironbox?'னு கேட்கும் போதுதான் மறுபடியும் அவன் ஞாபகம் வருது. இப்ப எனக்கு இன்னொருத்தன் கிடைச்சுட்டான். ஆனா இவன் அவனப்போல குறும்பு இல்ல. அவன் அவன்தான்.

- இப்படிக்கு “சக்திவேல் லோகநாதன்”

"டேய் பாஸு,எல்லா பணத்தையும் செலவழிச்சிடாம, உன் பெரியப்பா வீட்டிக்கு 2 பிஸ்கெட் பாக்கேட், வெத்தலை சீவல், ஸுவீட் கடைல கால் கிலோ மிக்சர் வாங்கிக. பஸ் 6 மணிக்கு வந்திடும். நீ கிளம்பு, சாயங்காலம் 5.30 மணி பஸ்ல வந்திடு, சரியா ".

அம்மா சொன்ன எல்லாமும் வாங்கி பேருந்துக்காக காத்திருந்தேன், அதோ என் சொந்த ஊருக்காக செல்லும் பேருந்து வந்துவிட்டது. மொத்தம் 7 பயணிகளில் நானும் ஒருவனாக ஜன்னலோர இருக்கையில் பயணம். பேருந்தில் ஜன்னலோர பயணம் என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான, இனிமையான பயணம். அதுவும் அதிகாலை பயணமும், நிலா இரவு பயணமும் என்றுமே சுகம்தான்.

கிராமபுறத்திர்க்கு பெரும்பாலும் இயக்கப்படும் டவுன் பஸ்களின் ஒன்றில் அன்று எனது பயணம். சுமார் 45 நிமிட பேருந்து பயணத்தில் எனது சொந்த கிராமத்தை அடைந்துவிடமுடியும்.

எல்லோருக்கும் சொந்த ஊர் என்றவுடன் ஏதோ ஒரு ஈர்ப்பும், ஏதோ ஒரு பற்றுதலும் ஏற்படுகிறது. எனக்கும் என் சொந்த ஊரை பார்க்க போகிறேன் என்ற ஆவலாக இருந்தது. சொந்த ஊர் கிராமமாக இருந்துவிட்டதால் இன்னும் அதிகமான ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

15 நிமிட பயணத்தில் நகரை கடந்து கிராம புறங்களின் வழியே பயணம் தொடர்ந்தது.
அதிகாலை சூரியன் தனது ஒளி கரங்களை அகலமாக விரித்து கொண்டிருந்தான். சிலு-சிலுவென்ற இதமான பனி காற்று வீசியது. பச்சை பசேல் என்று வளர்ந்திருந்த பயிர்களின் நடுவே கொக்கு கூட்டம் கூட்டமாய் மெய்ந்து கொண்டிருந்தன.

பேருந்தின் ஒலி கேட்டு மொத்தமாய் பறந்தன அத்தனை கொக்கு கூட்டமும்.
அடடா! எத்தனை அழகு. ஒடும் பேருந்தில் இருந்து இறங்கி அங்கேயே இயற்கையின் அழகை பருகலாம் போல் இருந்தது. என் மொத்த மனமும் அந்த அழகிய பொழுதின் இளம் பனியாய் கரைந்து கொண்டு இருந்தது.

பசுமை கடலாய் பரவி இருந்த பயிர்களின் நடுவே கப்பலாய் பேருந்து பயணித்து கொண்டு இருந்தது. எனை மொத்தமாய் கரைத்து கொண்ட இயற்கை கடலின் பயணத்தில் நடுவே ஊர் வந்ததை உணர்த்தியது பல கரங்களை பூமியுடன் குழுக்கும் பெரிய ஆலமரம்.

அடுத்த நிறுத்ததில் இறங்கி வேகமாக நடைபோட்டேன் பெரியப்பாவின் வீடு நோக்கி.

"வாடா! நல்லா இருக்கியா? அப்பா, அம்மா நல்லா இருக்காங்கலா? ஏண்டா போனமாசம் வரல" - என்னுடைய பெரியம்மா.

"School leave கிடையாது, இப்பதான் கிடைச்சிச்சு".

"தம்பிய ஏண்டா அழைச்சிட்டு வரல?"

"அம்மா வரும் போது அழைச்சிட்டு வராங்கலாம். ஆமா, பெரியப்பா எங்க?"

"அவரு காலைலே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச பொய்டாரு. சாப்டியா? ஏய் நடுபுள்ள, தம்பீக்கு சாப்பாடு கொடுதிட்டு சீக்கிரம் அப்பாக்கு சாப்பாடு எடுத்துட்டு போ, அப்பா, நீவருவனு பாத்திட்டு இருக்க போராரு"

"பெரியம்மா, நானும் பெரியப்பா கூட வயலுலே சாப்பிட்டுக்கிறேன்" நானும், எனது அக்காலும் தூக்கு வாளியில் சாப்பாட்டை எடுத்து கொண்டு வயல் நோக்கி போய்கொண்டு இருந்தோம்.

வழியில் தென்படுபவர்கள் எல்லோரும், "யாரு? செல்வாராசு பையனா,எப்படி இருக்க?

அப்பா, அம்மா எப்படி இருக்காங்க? நீ பெரியவனா, சின்னவனா?" என நலம்விசாரித்தார்கள்.

இதுவரை நாலைந்து பேர் நலம் விசாரித்திருப்பார்கள், அவர்களில் ஒருவரை மட்டும் அடையாளம் தெரிந்தது. மற்றவர்களை "அவர்கள் யார்?" என்று என் அக்காவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.

உண்மையான அன்போடும், மிகுதியான அக்கரையோடும் பரஸ்பரம் நலம் விசாரிப்பது கிராமபுற மக்களுக்கே உரித்தான தனித்துவமான அடையாளம்.
அப்படி நம்மிடம் நலம் விசாரிக்கும் போது கிராமபுற மக்களின் மீது பற்றும், அவர்கள் மீதான மரியாதையும் அதிகமாகிறது.

இதே அக்கரையுடன் நகர்புறங்களில் நலம் விசாரிக்கப்படுவத்தில்லை. அப்படி ஒருவர் நலம் விசாரித்தால் நமக்கு பயமே தோன்றுகிறது. நகர்புறத்தில், அடுத்த வீட்டில் இருக்கிறவரின் பெயர் என்ன,எத்தனை பேர்இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரிவதில்லை.

பெரிய வாய்காலின் கரையில், இளம்காலை பொழுதில் அக்காவோடு நடந்து கொண்டு இருக்கிறேன்.

"அதோ தெரியுது பாரு ஒத்த பனமரம்,அதுலதான் பேய்ங்க நிறைய இருக்குதாம்.
நான் மதியானம் வயலுக்கு வந்தேனா, அந்த பக்கம் பாக்கவே மாட்டேன். சில சமயம்அந்த குட்டை வரையிலும் ஒடிடுவேன்"

அக்கா சொல்ல, சொல்ல அவ கைய நல்லா இருக்கமா புடிச்சிக்கிறேன். அக்காவும், நானும் கொஞ்சம் வேகமாக நடக்கிறோம்.

"அதோ நம்ம வயல் தெரியுது பாரு" என்றால் அக்கா.

பெரியப்பா அங்கு வாய்காலில் இருந்து வயலுக்கு ஏற்றம் போட்டு தண்ணீர் பாய்த்து கொண்டு இருந்தார்.

"வாடா! நல்லா இருக்கியா? 6.30 பஸ்ஸுக்கு வந்தியா? அப்பா, அம்மா நல்லா இருக்காங்கலா? தம்பி வரலையா?"

"எல்லாம் நல்லா இருக்காங்க, அவன் அடுத்த முறை அம்மாகூட வாருவான். நீங்க நல்லா இருக்கிங்கலா?"

"எனக்கு என்னடா? நான் நல்லாதான் இருந்கேன். வயல பத்தியா? நாத்து நல்லாவந்துருச்சு, இன்னும் நாலு நாள்ல நடவ ஆரம்பிக்க வேண்டியதுதான்."

"பாத்தேன். எல்லாம், நல்லா வந்திருக்கு."

"என்னடா, உர மூட்டை விலையெல்லாம் அநியாயத்துக்கு அதிகமாச்சு. மழையும் இப்ப சரியா பெய்ரதில்லை. வாய்கால்ல இந்த வருஷம் தண்ணீ கம்மியாதான்வருது. இப்படியே போன எவனும் விவசாயம் பண்ண மாட்டான்"

அவருடைய பேச்சின் துயரம் எனை ஏதோ செய்தது. "போய் வயல சுத்தி பாத்திட்டு வா" என்றார்.

வயல் சேற்றின் வாசமும், பக்கத்து வயலின் பயிரின் வாசமும் என்னை இயற்கையின் சிறகுகளில் அடக்கிவிட்டன. என்னையே மறந்தேன். புது உலகத்தில் நடந்து கொண்டு இருந்தேன். இல்லை, இல்லை மிதந்து கொண்டுஇருந்தேன். வயலின் வரப்பில் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருந்தது.

கொக்குகள் மீன்களையும், நண்டுகளையும் அழகான அலகுகளால் கொய்து கொண்டு இருந்தன. சில கொக்குகள் மீன்களை கொத்திகொண்டு பறந்தன.

இதோ நானும் கொக்குகலோடு பறந்து கொண்டு இருக்கிறேன். எவ்வளவு நேரம் இப்படியே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன் என்று தெரியவில்லை.

அக்கா வந்து, என் தோளை தொட்டு " டேய் பாஸு, எவ்வளவு நேரம் கூப்பிடுறது, அப்படி என்னதான் பாத்திட்டு இருக்க.வா சாப்பிடலாம்" என்றாள்.

தட்டில் சாதமிட்டு, சாம்பாரின் சில காய்கறிகளும், முலை கீரை கூட்டும் இருந்தன.

வயலின் வரப்பில் உட்கார்ந்தேன். பக்கத்தில் ஓடும் வரப்பு தண்ணீரில் கை கழுவிவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன்.

"பரீட்சை எப்படா, நல்லா படிக்கிறியா" என்றார் பெரியப்பா.

"பரீட்சை அடுத்த மாசம், நல்லா படிக்கிறேன்" சாப்பாடு முடிந்து மறுபடியும் தண்ணீர் பாய்ச்ச ஆயத்தமானார்.

"வீட்டுக்கு போ, நான் 3 மணிக்கு வந்திடுறேன்".

"அக்கா போகட்டும், நான் இங்கேயே இருக்கேன். நானும் உங்க கூட 3 மணிக்கு வீட்டுக்கு கிளம்புறேன்".

பெரியப்பா தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தார். அக்கா பாத்திரங்களை கழுவி எடுத்து கொண்டு "சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுடா பாஸு" என்று நடக்கலானாள்.

நான் வயலின் ஒரம் இருந்த மேட்டில், மரத்தின் நிழலில் அமர்ந்து, இயற்கையின் அழகை பருக ஆரம்பித்தேன். எத்தனை அழகு, இந்த பூமி மகள்.

இதையெல்லாம், இந்த அழகான, இனிமையான, அமைதியான, ரம்மியமான நகரவாழ்வில் தொலைந்தேனா தொலைத்தேனா!!!!

- இப்படிக்கு "பாஸ்கி"

Newer Posts Older Posts Home