அப்பா

இவனுங்க பம்பரத்துக்கு மட்டும் எப்படி இத்த பெரிய ஆணி!. ஒரு வேள தினம் தினம் வளருதா?'னு சந்தேகமாவே இருக்கும். இவனுங்கல்லாம் 'எடப்பாடி' ஸ்கூல்ல படிக்கறதால 'மச்சி கடை'ல இருந்து ஸ்பெஷலா சொல்லி வாங்கிட்டு வராங்களாம் !. நல்லா கூரா பளபளன்னு மின்னும், விட்டோம்னா சும்மா பூச்சியாட்டம் சுத்தும். என்னோட பம்பரம் மட்டும் ஏனோ 'தக்கடதை' போட்டுகிட்டே இருக்கும். அது சுத்தரப்ப சாட்டை 'திரி'ய ஆணில வச்சோம்னா உடனே 'எலி' பிடிக்கும். என் பம்பரத்துக்கு பேரே 'எலிபொறி'னு வச்சுட்டானுங்க. சைக்கிள் ஸ்டாண்டுல இருந்து ஊர்ல இருக்குற எல்லா தண்ணீர் பைப்பு வரைக்கும் ஆணி பிடுங்கத்தான் வச்சுருக்கேன். எத்தன தடவ மாத்தி மாத்தி ஆணியடிசாலும் அதே 'தக்கடதை' அதே 'எலிபிடி'.

வேட்டைக்கு போறமாதிரி காலைல பம்பரமும் சாடையும் எடுத்துட்டு புளியமரத்தடிக்கு போனோம்னா திரும்பி வரப்ப ராத்திரியாகியிருக்கும் இல்லனா பம்பரம் விரிசலோடிஇருக்கும், அதுவும் இல்லனா, அந்த பாட்டி வீடுக்குள்ள பம்பரம் போயிருக்கும், அது 'வாழ்த்து மழைய' வசை பாடிகிட்டு இருக்கும். உள்ள போன பம்பரம் சாப்பாட்டு குண்டாமேல ஏறி சுத்திகிட்டு இருந்ததா அந்த பாட்டி வந்து வந்து சத்தியமே பண்ணும். அப்பவெல்லாம் சத்தியமா நா விடற பம்பரம் தரைலயே சுத்தாது அப்புறம் எப்படி சாப்பாட்டு குண்டாமேல ஏறி .. ??

காலைல போறப்ப புதுப்பொண்ணு மாதிரி இருக்கிற என்னோட பம்பரத்த திரும்பி வரப்ப சொறிநாய் மாதிரி செஞ்சி வச்சுருவாங்க. இதோட புது சாயம் அவனுங்க பம்பர ஆணில ஒட்டியிருகிறத மூஞ்சி முன்னால காட்டி காட்டி ஆடுவானுங்க. எல்லாரும் என்னோட பெரிய வயசு பசங்கதான், தைரியமாதான் போவேன் ஆனா ஒரோருத்தனும் கைய வானத்து வரைக்கும் தூக்கி குறிபாத்து அடிக்கறப்ப அது 'ம்ம்ம்ம்'னு பயமுறுத்திகிட்டே சுத்தும். என்னோட பம்பரம் பெரும்பாலும் ‘சரண்டர்' ஆகி வட்டத்துக்குள்ளயே ஆணிய நீட்டி படுத்துட்டு இருக்கும்.

லேசா தூறல் போட ஆரம்பிச்சதும் ஆட்டமும் சூடு பிடிக்க ஆரம்பிச்சுடும். அது யாருக்கோ வருதுங்கரமாதிரி மதிக்காம எல்லோரும் தீவிரமா விளையாட ஆரம்பிப்போம்.

"டேய் கட்ட உள்ள இருக்குது மரியாதையா உள்ளயே வையி.. "
"இல்ல கட்ட வெளியில .."
"ஒழுங்கா பாரு ஆணி கோட்டுமேல படுத்துருக்கு"
"இல்லல்ல கட்ட வெளியிலதான்.."

குமாரும் சந்துருவும் சண்ட போட்டுக்கிட்டு இருக்காங்க..
"இங்க வட்டம் அழிஞ்சிருக்கு, ஆனா கட்ட வெளியிலதான்".
"இல்லல்ல நீ ரவிய கூப்டு, புதுசா இது மேல வட்டம் போடட்டும் அப்ப தெரியும்.."

உடனே வட்டம் போடற ஸ்பெஷலிஸ்ட் 'ரவி' வரவழைக்கப்பட அவன் 'காம்ப்பஸ்' கூட இல்லாம அழகா வட்டம் போட்டான். ஏனோ ஆணிகிட்ட வர்றப்ப மட்டும் அவன் கை கொஞ்சம் நடுங்கிச்சு. கடைசியா 'கட்ட உள்ளதான்'னு பரபரப்பு தீர்ப்பு வர, குமார் அத ஒத்துக்க மறுக்க ஆட்டம் மறு தேதி சொல்லாமலே நிறுத்தப்பட்டது.

ஆமா நா இன்னிக்கு விளையாட போகல .. என்னமோ தலைல பாரமா இருக்கு உடம்பெல்லாம் சுடுது. ஒருவேளை நேத்து மழைல நனைஞ்சதால இருக்குமா?. யாருக்கும் தெரியாம படுத்துக்கணும், முக்கியமா எங்க அப்பாவுக்கு தெரியவே கூடாது.

"என்னாச்சாம் இவனுக்கு" உள்ள வந்ததும் கேட்கறார்.
"என்னமோ சுருண்டு சுருண்டு காலைல இருந்தே படுத்துட்டே இருக்கறானே. கேட்டா சொன்னதான .."
"என்னாச்சுப்பா ?"
" ஒண்ணுமில்லப்பா சும்மா குளிருதுன்னு படுத்துட்டு இருக்கேன்.."
"குளிருதா இப்படி நெருப்பாட்டம் கொதிக்குது. நேத்து கழுதமாதிரி குதிக்கிறப்பவே நெனச்சேன். பையன இப்படி போட்டுட்டு என்னதான் பண்ணறா இவ?." என்னால இவங்களுக்குள்ள ஒரு சின்ன சண்ட உதயமாகி உடனே அஸ்தமனமாகும்.

வேக வேகமா போயி 'பாரதி கடை'ல மாத்திர வாங்கிட்டு வருவாரு. அது மளிகை கடைதான் ஆனா 'காய்ச்சல் மாத்திரை'னு சொன்னா பாரதிக்கு தெரியும், 'பாராசிடமால்' தருவாரு ஆனா 'பாராசிடமால்'னு கேட்டா அவருக்கு தெரியாது. எங்க கிராமத்தோட 'மல்டி டிபார்ட்மெண்டல்' ஸ்டோர். அங்க எல்லாம் கிடைக்கும் ஆனா விலைதான் MRP க்கு கொஞ்சம் மேல இருக்கும்.

"இப்போதைக்கு இந்த மாத்தரைய மட்டும் போட்டுக்க, நேத்து விட்டுட்டு வந்த வேலை கொஞ்சம் மிச்சம் இருக்குது, அதையும் முடிச்சிட்டு பணம் வாங்கிட்டு வந்துர்றேன்,நாம சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு போலாம்”,னு சொல்லிட்டு அவசர அவசரமா அந்த பழைய சைக்கிள எடுத்துகிட்டு நாளைக்கு செய்ய வேண்டிய வேலைய ஏனோ இன்னிக்கே முடிக்க கிளம்புறார். அதே அவசரத்தோட களைத்துப்போய் மறுபடியும் மாலைதான் வீடுதிரும்புகிறார். தலையில் மறுபடியும் கைவைத்து பார்த்து ‘தற்போதைய நிலவரம்” அறிந்து சொல்கிறார். “எதுக்கும் ஒரு ஊசிய போட்டுட்டு வந்துரலாம்,நீ வேற சட்டையும்,டிராயரும் போட்டுட்டு கிளம்பு”.

ஒரு இடத்துல இருந்த காய்ச்சல் ஊசின்னு சொன்னதும் உடம்பெல்லாம் குப்புன்னு பரவுது. அத நினைச்சாலே ஊசி போடுற இடம் போடாமலே வலிக்கும். எனக்கு கைல சதை பத்தலையாம் அதனால எங்க ஊசிபோட போனாலும் ‘ஆல்டர்னேட்’ இடந்தான் எல்லா டாக்டரும் தேர்ந்தெடுப்பாங்க.

“அப்பா ஊசி வேண்டாம்பா..”
“சரி அவருகிட்ட ஊசி வேணாம்,மாத்தரையே தரச்சொல்றேன்,நீ கிளம்பு”

நான் கிளம்பியதும் வீட்டில இருக்கும் இரண்டு ‘துண்டு’ல ஒன்று என் தலைமீது இருக்கும், மழையில் நனையாமல் இருக்க. இன்னோரு துண்டு நான்காக மடித்து சைக்கிள் கேரியரில் போட்டு அதுமேல என்னை உட்கார வைப்பாரு,சிம்மாசனம் மாதிரி நானும் ஏறி உட்கார்ந்துக்குவேன். அப்பா சைக்கிள்ள உட்கார்ந்து அவர பிடிச்சுக்கிட்டு போர இந்த சந்தர்ப்பம் எனக்கு காய்ச்சல் வந்தாதான் கிடைக்கும் !!.

என்னோட ரெண்டு காலையும் சக்கர கம்பியில படாம பார்த்து பின்னி வைப்பார். “அங்க போறவரைக்கும் கால எடுக்காம இப்படியே உட்கார்ந்துட்டு வரணும்”னு சொல்லிட்டு மழைத்தூறல்ல என் தலையில் டவலைப் போட்டுட்டு வெறும் தலையோடு அவர் முச்சிரைக்க சைக்கிள மிதிப்பாரு.அந்த சீட்டு வேற ‘கீசி,கீசி’னு சத்தம் போட்டுட்டே வரும்.அது எனக்கு “ஊசி,ஊசி” னு தான் கேட்கும்.

“ஒண்ணும் படிக்கிற மாதிரி தெரியல,எந்த நேரமும் கையில பம்பரம்,கில்லி..” “பாதில வந்தா தோத்தாங்குளி, தோத்தாங்குளி’னு பெரிய பசங்களெல்லாம் சொல்றாங்கப்பா ! “
“டியூசன் கியூசன் ஒன்னும் போயிடாத..”
“அவங்கதான் என்னை பொய்ஏமாத்தி பொய்ஏமாத்தி என்னோட கட்டைய உடைக்கிறாங்க. மழையிலயும் கூட விடல எனக்கு பிடிக்காத விஷயத்தைப் பத்தித்தான் அவரு கேட்பாரு,

எனக்கு பிடித்த விஷயத்திலிருந்துதான் பதில் தருவேன்! அதனால கேள்வியும் பதிலும் கொஞ்சம் கொஞ்சம் சம்மந்தம் இல்லாமதான் இருக்கும்.

அவர் ‘எடப்பாடி’ய நெருங்க நெருங்க காய்ச்சல் விட இந்த பயம்தான் எகிறி எகிறி வரும்.

“இல்லப்பா ஒழுங்காதான் படிக்கிறேன். இதுலயும் கூட பர்ஸ்ட் ரேங்க் வந்துரும்ப்பா, பேபியக்கா காலாண்டுக்கு மேலதான் டியூசன் எடுப்பாங்கலாம், டியூசன் ஃபீஸ் கூட எனக்கு இருபத்தஞ்சு ரூபாயாம், குட்டிக்கு இருபதாம்”

அவர் அப்ப கேட்ட கேள்விக்கு பதில் இப்ப வரும்.எல்லாம் ஒரு காரணமாத்தான் !.

“சரிடா நா அவர்ட்ட ஊசிவேணாம், மாத்திரையே போதும்னு சொல்றேன்”, எப்படியோ அப்பா புரிஞ்சுக்குவாரு !! .

அவருக்கு ஹாஸ்பிடல் என்பதெல்லாம் இந்த ‘முத்தையா மெடிக்கல்ஸ்’ தான். அங்குதான் கூட்டிட்டுபோவார்.சகல வியாதிக்கும் அங்கே மருந்திருக்கும் என்பது இவர் நம்பிக்கை. உள்ள தனியா ஒரு ரூம் அதுல ஒரே ஒரு நீளமான பெஞ்சு இதுதான் ஹாஸ்பிடல், வெளில மெடிக்கல்ஸ். அந்த ‘புளு’ கலர் பெயர் பலகைய பாக்கறபோதே ஒன் பாத்ரூம்போற அளவுக்கு பயம் வரும். “அப்பாப்பா மாத்திர போதும்னு..”

“உடனே அப்பா முத்தையாகிட்ட ஏதோ சத்தமில்லாம பேசிட்டு “ இல்லடா நா கேட்டனே, எறும்பு கடிக்கிரமாதிரிதான் இருக்குமாம், இருந்தாலும் மாத்தரதான் தரசொல்லிருக்கறன் “ என்பாரு. எந்த ஊர்ல எறும்பு ‘சிரஞ்ச்’ வச்சிகிட்டு கடிக்குதுன்னுதான் தெரியல.

“பையனுக்கு வயசு என்னங்க லோகு?”
“பண்ணண்டு ஆகுதுங்க !”

“கல்யாணம் செய்யிற வயசாகுது இப்படி பயப்படுறயே, இப்ப நீ வரப்ப வெளில போன சின்ன பையன், பயப்புடாம ஊசி போட்டுட்டு போறான் சரி, நான் ஊசி போடல, டிராயர கழட்டிட்டு பெஞ்சு மேல ஏரி குப்புற படு”.

மாத்திர தர்றதுக்கு எதுக்கு நான் டிராயர கழட்டிட்டு குப்புர படுக்கனும். அவங்க சூழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமா விளங்க நான் அழ ஆரம்பிக்கும் போதே,அப்பா சொல்வாரு “நீ மொதல்ல படுடா, செக்கப்தான் செய்யப்போறாரு “னு சொன்னபடியே குப்புறபடுத்து கண்ண இறுக்கமா மூடிட்டு ,அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மெல்ல திறந்து பாக்கறதுக்குள்ள, என்னோட ரெண்டு காலையும் அப்பா இறுக்கமா பிடிச்சிருப்பார். “சும்மா, எறும்பு கடிக்கிரமாதிரிதான் இருக்கும்”னு மறுபடியும் ஒரு பொய்ய சொல்லச்சொல்ல அந்த ‘பாவச்செயல்’ நடந்தே விடும்.

“நம்பிக்கை துரோகிகளா!’ங்கரமாதிரி ரெண்டு பேரையும் பார்ப்பேன். ஏதோ ஒரு டீக்கடையில கொஞ்சம் சுடுதண்ணி வாங்கி மாத்திரைய சாப்பிடவைத்து, அதோட ரெண்டு ஆரஞ்சு பழம், ஒரு ‘மில்கா’ பண்ணுன் வாங்கித்த்ந்து அதேபோல சைக்கிள்ல உட்காரவச்சு “நாளைக்கு மறுபடியும் மழையில வெளையாடணும், என்ன?”னு கேட்டுட்டே வருவார்.காய்ச்சலும் குறைஞ்சிட்டே வரும். நாளைக்கு மறுபடியும் போருக்கு கெளம்பிரலாம்.

அப்பாவுடனான என் ‘ஊசி நாட்களின்’ நினைவுகள் இத்தனை வருடங்களுக்கு பிறகு கண்ணீர்த்திரையாய் தேங்கி நிற்கிறது.” நான் கேட்டுட்டேன்பா, பயப்பட தேவையில்லையாம், சும்மா எறும்பு கடிக்கிரமாதிரிதான் இருக்குமாம்’னு அதே பொய்யை சொல்லி அவரை ‘ஆஃபரேஷன்’ தியேட்டருக்குள் அனுப்பிவிட்டு வெளியே காத்திருக்குபோது.

-சக்திவேல் லோகநாதன்

Newer Post Older Post Home